மேகாலயாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்.. திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி

 
திரிணாமுல் காங்கிரஸ்

எதிர்வரும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று  திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.


மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தை தாண்டி வடகிழக்கு மாநிலங்களிலும் தனது அரசியல் களத்தை விரிவுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளது. மேகாலயாவில் 60 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை  தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 27ம் தேதியன்று நடைபெற உள்ளது. எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற்று அங்கு திரிணாமுல் காங்கிரஸ் காலூன்ற வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி மிகவும் தீவிரமாக உள்ளார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் மேகாலயா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், அனைத்து தரப்பு வாக்காளர்களையும் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. 

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில், மேகாலயா இளைஞர் அதிகாரமளிப்பு திட்டத்தின்கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் 3 லட்சம் வேலைகள்  வழங்கப்படும். 21 முதல் 40 வயது வரையிலான வேலையில்லாதஇளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்ணுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். பி.டபிள்யூ.டி, ஒற்றைத் தாய்மார்கள், விதவைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கான சமூக நல ஓய்வூதியங்கள் அதிகரிப்பதுடன் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்பு அளிக்கப்படும். அனைவருக்கும் இ-ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். 

வேலைவாய்ப்பு

இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைத்து மாவட்டங்களிலும் மறுஆய்வு  நடத்தப்படும். இதனுடன் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து மாநில விவசாயிகளுக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குழாய் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து 6,459 கிராமங்களும் கறுப்பு டாப் மோட்டார் சாலைகளுடன் இணைக்கப்படும். ஒவ்வொரு தொகுதியிலும் தாய் மற்றும் சேய் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும். சிறப்பு மருத்துவர்களை பணியமர்த்துதல், புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல் மற்றும் தரமான மூன்றாம் நிலை சுகாதார வசதிகளை உறுதி செய்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.