குடியரசு தலைவர் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.. அமைச்சரின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது.. திரிணாமுல் காங்கிரஸ்

 
திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், அமைச்சர் அகில் கிரியின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என்று திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி கூட்டம் ஒன்றில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அகில் கிரி, அவர் (சுவேந்து அதிகாரி) நான் (அகில் கிரி) அழகாக இல்லை என்கிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். நாம் மக்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. உங்கள் குடியரசு தலைவரின் நாற்காலியை (பதவியை) நாங்கள் மதிக்கிறோம். உங்கள் குடியரசு தலைவர் எப்படி இருக்கிறார்? என்று பேசியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த அகில் கிரியை நெட்டின்சன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அகில் கிரியின் பேச்சு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய் டிவிட்டரில், இது (அகில் கிரியின் பேச்சு) ஒரு பொறுப்பற்ற கருத்து மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இந்திய குடியரசு தலைவர் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் (திரௌபதி முர்மு) மற்றும் அவரது பதவியை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துகிறோம் என பதிவு செய்துள்ளார்.திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் டிவிட்டரில், உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருப்பவர்கள் குறித்து இது போன்ற பொறுப்பற்ற கருத்துக்கள் கூறப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தோற்றம் போன்றவற்றைப் பற்றிய இத்தகைய கருத்துக்கள் மிகவும் மோசமான ரசனையில் உள்ளன. இது திரிணாமுல் காங்கிரஸின் உள்ளடக்கிய அரசியலை நிச்சயமாக பிரதிபலிக்காது. அனைவருக்கும் பரஸ்பர மரியாதையை நாங்கள் நம்புகிறோம் என பதிவு செய்துள்ளார்.

அகில் கிரி

குடியரசு தலைவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்கு  தனது சொந்த கட்சியே எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அகில் கிரி மன்னிப்பு கேட்டார். அகில் கிரி இது தொடர்பாக கூறுகையில், நான் மாண்புமிகு குடியரசு தலைவரை அவமரியாதை செய்ய நினைக்கவில்லை. பா.ஜ.க. தலைவர்கள் என்னை வார்த்தைகளால் தாக்கியதற்கு நான் பதிலளித்தேன். ஒவ்வொரு நாளும் என் தோற்றத்திற்காக நான் வார்த்தைகளால் தாக்கப்படுகிறேன். நான் குடியரசு தலைவரை அவமரியாதை செய்ததாக யாராவது நினைத்தால் அது தவறு. அப்படி ஒரு கருத்தை கூறியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நமது நாட்டின் குடியரசு தலைவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என தெரிவித்தார்.