குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்

 
அகில் கிரி

மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் நடைபெற்று வருகிறது.  முதல்வர் மம்தா அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சராக இருப்பவர் அகில் கிரி. இவர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களை பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேற்கு வங்கம் நந்திகிராமில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அகில் கிரி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரௌபதி முர்மு

அந்த வீடியோவில் அமைச்சர் அகில் கிரி,  அவர் (சுவேந்து அதிகாரி) நான் (அகில் கிரி) அழகாக இல்லை என்கிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். நாம் மக்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுவதில்லை. உங்கள் குடியரசு தலைவரின் நாற்காலியை (பதவியை) நாங்கள் மதிக்கிறோம். உங்கள் குடியரசு தலைவர் எப்படி இருக்கிறார்? என்று பேசியுள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த அகில் கிரியை நெட்டின்சன்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பா.ஜ.க.

மேலும், அகில் கிரியின் கருத்தை குறிப்பிட்டு, மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸூம் பழங்குடியினருக்கு எதிரானவர்கள் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு வங்க பா.ஜ.க. டிவிட்டரில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பழங்குடிய சமூகத்தை  சேர்ந்தவர். பெண்கள் நலத்துறை அமைச்சர் சஷி பஞ்சா முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸின் அகில் கிரி, அவரை (குடியரசு தலைவர் திரௌபதி முர்மு) பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். மம்தா பானர்ஜியும், திரிணாமுல் காங்கிரஸூம் பழங்குடியினருக்கு எதிரானவர்கள் என தெரிவித்துள்ளது.