மக்களவை காங்கிரஸ் எம்.பிக்கள் 4 பேரின் இடைநீக்கம் ரத்து

 
congress mps

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 4 பேரின் இடைநீக்கத்தை சபாநாயகர் ஓம்.பிர்லா ரத்து செய்துள்ளார். 

நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த மழைக்கால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட  பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த 25ம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  அவைத்தலைவர் இருக்கை முன்பாக நின்று பதாகைகளுடன்  அமளியில் ஈடுபட்டதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 மக்களவை உறுப்பினர்களை இடைநீக்கம்  செய்து சபாநாயகர் அறிவித்தார்.  காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரை அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து  முழுவதுமாக  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

congress mps

இந்நிலையில், எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதேபோல் காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் அதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகரிடம் உறுதிமொழி அளித்தார். அதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியவுடன், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஓம் பிர்லா நிறைவேற்றினார். அப்போது சபாநாயகர் ஓம்.பிர்லா கூறியதாவது: அவைக்குள் பதாகைகளை கொண்டு வரக்கூடாது என அனைத்துக் கட்சியினரையும் கேட்டுக் கொள்கிறேன். பதாகைகள் கொண்டு வந்தால், அரசு மற்றும் எதிர்க்கட்சியினர் சொல்வதை கேட்கமாட்டேன், உறுதியாக நடவடிக்கை எடுப்பேன். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு கடைசி வாய்ப்பு அளிக்கிறேன். இவ்வாறு கூறினார்.