உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாது - மத்திய அரசு..

 
இந்திய மாணவர்கள் - உக்ரைன்


 உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய  மாணவர்கள், இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

உக்ரைனில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், ரஷ்யா  போர் தொடங்கியது. இதனையடுத்து அங்கு மருத்துவம் படிக்கச் சென்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தாயகம் திரும்பும் சூழல் ஏற்பட்டது.   அந்த மாணவர்களின் படிப்பும், எதிர்காலமும்  கேள்விக்குறியானது. அவர்கள் இந்தியாவிலேயே  படிப்பை தொடர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  அவர்களை  இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க வேண்டும் என்றும்  பல்வேறு மாநில அரசுகளும் தொடர்ந்து மத்திய அரசை   வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து,  இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.   

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

மக்களவையில்  கவிதா மலோத் உள்ளிட்ட எம்.பி.க்கள்,  உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லையா என்றும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை இங்கு உள்ள மருத்துவக் கல்லுரிகளில் சேர்ப்பதற்கு மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா? என்றும்  கேள்வி எழுப்பினர். இதற்கு  மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என்று தெரிவித்தார்.

மருத்துவர்

மேலும்,  உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது என்றும். 'இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை, இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கான முடிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.  அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம்  எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.