8 ஆண்டுகளில் 1% பேருக்கு கூட மத்திய அரசு வேலை கிடைக்கவில்லை - வெளியான அதிர்ச்சி தகவல்..

 
வேலைவாய்ப்பு


கடந்த 8 ஆண்டுகளில் 1% பேருக்கு மட்டுமே மத்திய அரசு  பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியாவில்  கடந்த 8 ஆண்டுகளாக   பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்து வருகிறது.  இந்த நிலையில் அடுத்த 18  மாதங்களில்  10 லட்சம்  பேருக்கு பணி  வழங்க  இருப்பதாக மத்திய  அரசு கடந்த  ஜூன் 14ம் தேதி அறிவித்தது. அனைத்து துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை  நடத்திய பிறகு  பிரதமர் அலுவலகம்  இந்த அறிவிப்பினை வெளியிட்டது. ஆனால் தற்போது கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரம் வெளியாகியிருக்குறது.  

8  ஆண்டுகளில் 1% பேருக்கு கூட மத்திய அரசு வேலை கிடைக்கவில்லை - வெளியான அதிர்ச்சி  தகவல்..

வரப்போகும்  18 மாதங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கப்போவதாக அறிவித்திருப்பதை  விடுங்கள், ஆனால்  கடந்த 8 ஆண்டுகளில் மத்திய  அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை  8 லட்சத்தைக் கூட தொடவில்லை.  தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., ஒருவர்  மக்களவையில் இது தொடர்பாக  கேள்வி எழுப்பியிருந்தார்.  அதற்கு மத்திய  இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்திருக்கிறார்.  அதில்,  2014 முதல் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலைகளுக்காக 22 கோடியே 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களில்  7. 22 லட்சம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.  

வேலைவாய்ப்பு

சராசரியாக ஆண்டுக்கு 2 கோடியே 75 பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில்,   ஆனால் சராசரியாக ஆண்டுக்கு 90,288 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,  2018 - 19ம் ஆண்டில் 38,100 பேருக்கும், 2021- 22ம் ஆண்டில் 38,850 பேருக்கும் மட்டுமே  மத்திய  அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிப்பதாகவும் கூறினார்.  ஒட்டுமொத்தமாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த  8 ஆண்டுகளில் 7 லட்சத்து  22 ஆயிரத்து  311 பேர் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.  அதாவது கடந்த 8 ஆண்டுகளிலும் விண்ணப்பித்தவர்களில்  இருந்து  ஒரு விழுக்காட்டினருக்கும் குறைவாகவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.