கர்நாடக சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து கோர விபத்து- சிசிடிவி வெளியீடு

 
ஆம்புலன்ஸ்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று குந்தாபுரா என்ற பகுதியில் இருந்து ஹொனாவரா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்று கொண்டிருந்தபோது துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியது.இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. நோயாளியை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வேகமாக வந்து கொண்டிருந்த போது சிரூர் டோல்கேட் மீது மோதி விபத்தை சந்தித்தது. இந்த கோர விபத்தில்  ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த நோயாளி அவரது மனைவி மற்றும் அவரது உறவினர் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் டோல்கேட் ஊழியர் ஒருவர் என இரண்டு நபர்கள் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாக வந்து கொண்டிருந்தபோது டோல்கேட் வழிப்பாதையில் பசு கன்று ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தி வாகனத்தை நிறுத்த முயற்சித்த நிலையில் கனமழையின் காரணமாக சாலை ஈரமாய் இருந்த காரணத்தால் பிரேக் செயலிழந்து ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்து டோல்கேட் மீது மோதி விபத்தை சந்தித்துள்ளது.இந்த விபத்து தொடர்பாக இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன முதல் சிசிடிவி காட்சியில் ஆம்புலன்ஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை சந்திக்கும் காட்சி.பசுக்கன்று சாலையில் படுத்து கொண்டிருக்கும் காட்சி மற்றொரு சிசிடிவி கட்சியில் வெளியாகியுள்ளது.