குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - 2வது கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

 
BJP

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது 

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப் பேரவையின்  பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி நிறைவடைகிறது. இதனையடுத்து குஜராத் தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதாவது  வருகிற டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 8ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படவுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில், முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளது.  குஜராத் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இசுதான்ன் காத்வி அறிவிக்கப்பட்டுள்ளார். 

bjp

இதனிடையே குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக கடந்த 10ம் தேதி அறிவித்தது. அதன்படி முதல்கட்டமாக 160 வேட்பாளர்களை பாஜக தற்போது அறிவித்தது. அதில், கட்லோடியா சட்டமன்ற தொகுதியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் போட்டியிடவுள்ளார்.  மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி போட்டியிடுகின்றார். அதேபோல், காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த ஹர்திக் படேல் விரம்கம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இதேபோல் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் பாஜக 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில்,  6 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாஜக 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கிடையே பாஜகவில் சீட் கிடைக்காததால் தற்போதைய எம்எல்ஏ மற்றும் 4 முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகிய 5 பேர் சுயேட்சையாக போட்டியிட போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 104 தொகுதிகளுக்கும், ஆம் ஆத்மி 176 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.