இந்து என்ற வார்த்தை பெர்சியாவில் இருந்து வந்ததுதான்.. நான் சொன்னதில் தவறில்லை.. காங்கிரஸின் ஜார்கிஹோலி உறுதி

 
சதீஷ் ஜார்கிஹோலி

இந்து என்ற வார்த்தை பெர்சியாவில் இருந்து வந்ததுதான், நான் சொன்னதில் தவறில்லை என்று கர்நாடக காங்கிரஸின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி தனது கருத்தில் உறுதியாக உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக காங்கிரஸின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிஹோலி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது: அவர்கள் இந்து தர்மம் பற்றி பேசுகிறார்கள். இது, இந்து வார்த்தை எங்கிருந்து வந்தது? அது நம்முடையதா? அது பெர்சியா. ஈரான், ஈராக், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளது பெர்சியா. அதற்கும் பாரதத்துக்கும் என்ன சம்பந்தம்? பிறகு இந்து எப்படி நம்முடையது? இது குறித்து விவாதம் நடத்த வேண்டும்?. 

விக்கிபீடியா

விக்கிபீடியாவை பாருங்கள், இந்த சொல் (இந்து) எங்கிருந்து வந்தது என்று? அது நம்முடையது அல்ல. பிறகுஏன் இவ்வளவு உயர்ந்த நிலையில் வைக்கிறீர்கள், அதன் பொருளை புரிந்து கொண்டால், நீங்கள் வெட்கப்படுவீர்கள். இந்து என்ற வார்த்தையின் அர்த்தம், மிகவும் அழுக்கு. நான் இதை சொல்லவில்லை. சுவாமிஜி இதை சொல்லியிருக்கிறார், இது இணையதளங்களில் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார். சதீஷ் ஜார்கிஹோலியின் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.  மேலும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். மேலும், அவரது சொந்த கட்சியான காங்கிரஸ் கூட, அவரது அறிக்கைகள் துரதிருஷ்டவசமானது என்றும் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்தது.

காங்கிரஸ்

ஆனால் சதீஷ் ஜார்கிஹோலி தான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறார். நேற்று சதீஷ் ஜார்கிஹோலி கூறுகையில், நான் சொன்னதில் தவறில்லை, பெர்சிய வார்த்தை (இந்து) எப்படி வந்தது என்று நூற்றுக்கணக்கான பதிவுகள் உள்ளன. சுவாமி தயானந்த சரஸ்வதியின் சத்யார்த்த பிரகாஷ் புத்தகத்திலும், டாக்டர் ஜி.எஸ். பாட்டீலின் பசவ பாரத் புத்தகத்திலும், பாலகங்காதர திலக்கின் கேசரி நாளிதழிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது, இவை மூன்றும் எடுத்துக்காட்டுகள். விக்கிபீடியா அல்லது எந்தவொரு வலைத்தளத்திலும் இது போன்ற பல கட்டுரைகள் கிடைக்கின்றன. தயவு செய்து அதைப் படிக்கவும்.