கருத்தியல், அரசியல் வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரு நண்பராக இணைந்திருக்கும் ஒரு நபர் ராகுல் காந்தி.. சஞ்சய் ரவுத்

 
சஞ்சய் ரவுத்

தன்னை நலம் விசாரித்த ராகுல் காந்தியை, கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரு நண்பராக இணைந்திருக்கும் ஒரு நபர் ராகுல் காந்தி என்று சஞ்சய் ரவுத் பாராட்டியுள்ளார்.

கருப்பு பணப் பரிமாற்ற வழக்கில் கைதான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்துக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து 110 நாட்கள் சிறையில் இருந்த சஞ்சய் ரவுத் அண்மையில் வெளியே வந்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சஞ்சய் ரவுத்தை போன் மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தியின் அனுதாபத்தை பாராட்டியதோடு, இதுதான் மனிநேயத்தின் அடையாளம் என்று சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

ராகுல் காந்தி
சஞ்சய் ரவுத் டிவிட்டரில், சில விஷயங்களில் பலத்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் அரசியல் சகாக்களிடம் (நலம்) விசாரிப்பது மனிதாபிமானத்தின் அடையாளம். ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிஸியாக இருந்தாலும், நேற்று (ஞாயிறு) இரவில் ராகுல் காந்தி என்னை அழைத்தார். நாங்கள் உங்களை பற்றி கவலைப்பட்டோம் என்று தெரிவித்தார். 110 நாட்கள் சிறையில் இரந்த ஒரு அரசியல் சகாவின் வலியை உணர்ந்த அவரது அனுதாபத்தை  நான் பாராட்டுகிறேன். கசப்பான காலங்களில் இத்தகைய சைகைகள் அரிதாகி வருகின்றன. 

பா.ஜ.க.

ராகுல் ஜி தனது யாத்திரையில் அன்பு மற்றும் இரக்கத்தின் மீது கவனம் செலுத்துகிறார், எனவே பெரும் வரவேற்பை பெறுகிறார். என பதிவு செய்து இருந்தார். மேலும், சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருத்தியல் மற்றும் அரசியல் வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் ஒரு நண்பராக இணைந்திருக்கும் ஒரு நபர் ராகுல் காந்தி. எனக்கு பா.ஜ.க.விலும் நண்பர்கள் உள்ளனர். ஆனால் நான் சிறையில் இருந்தபோது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர், இது முகலாய கால அரசியல் என தெரிவித்தார்.