யோகி ஜியின் காவல்துறைக்கு துப்பாக்கியில் தோட்டா கூட நிரப்ப தெரியாது... சமாஜ்வாடி கட்சி கிண்டல்

 
யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் காவல் நிலைய துணை ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியில் தோட்டாவை எப்படி நிரப்ப வேண்டும் என்பது தெரியாமல் தவறாக செய்த காட்சி அடங்கிய வீடியோ குறிப்பிட்டு, யோகி ஜியின் காவல்துறைக்கு துப்பாக்கியில் தோட்டா கூட நிரப்ப தெரியாது என்று சமாஜ்வாடி கட்சி கிண்டல் செய்துள்ளது.


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அம்மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஐி.) பஸ்தி ரேஞ்ச் ஆர்.கே. பரத்வாஜ், காவல் நிலையங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். கலிலாபாத் காவல்நிலையத்திலும் ஐ.ஜி. ஆர்.கே. பரத்வாஜ் ஆய்வு செய்தார். அப்போது. கலிலாபாத் காவல்நிலையத்தின் துணை ஆய்வாளரிடம் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்புவதை செய்து காட்டும்படி ஐ.ஜி. கூறினார். 

துப்பாக்கியில் தவறாக தோட்டா நிரப்பும் துணை ஆய்வாளர்

ஆனால் கலிலாபாத் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளருக்கு துப்பாக்கியில் தோட்டாவை எப்படி நிரப்புவது என்று தெரியிவில்லை. துப்பாக்கி வாங்கிய துணை ஆய்வாளர் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியே செல்லும் குழாயில் தோட்டாவை போட்டார். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இந்த விவகாரத்தை மேற்கோள் காட்டி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கத்தை சமாஜ்வாடி  விமர்சனம் செய்துள்ளது.

சமாஜ்வாடி

சமாஜ்வாடி கட்சி டிவிட்டரில்,  மாநில காவல்துறை ஐ.ஜி. கலிலாபாத் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட வீடியோ ஷேர் செய்து, யோகி ஜியின் காவல்துறைக்கு துப்பாக்கியில் தோட்டா கூட நிரப்ப தெரியாது. உத்தர பிரதேச போலீஸ் துப்பாக்கி குழல் வழியாக தோட்டாவை செருகியது, போலீஸ் அறியாமை உச்சத்தில் உள்ளது. ஏழை அப்பாவி மக்களை துன்புறுத்தும் பா.ஜ.க. அரசின் ஒழுக்கமற்ற காவல்துறையின் எஸ்.ஐ.க்கு துப்பாக்கியைப் பயன்படுத்த தெரியாது. வெட்கக்கேடானது. இப்படிப்பட்ட காவலர்கள் காவல் துறையை மேம்படுத்துவார்களா? என பதிவு செய்து இருந்தார்.