ரூ. 500க்கு கேஸ் சிலிண்டர், இலவச மின்சாரம் - குஜராத் தேர்தலையொட்டி ராகுல் வாக்குறுதி..

 
rahul gandhi-

 குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை ராகுல் காந்தி அறிவித்தார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனையடுத்து பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, மாநிலக்கட்சிகள்  என அனைத்து  கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.  மக்களை கவரும் வகையில் பல்வெறு  வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.  அந்தவகையில் குஜராத் தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சி சார்பில், அகமதபாத்தில்  பேரணி நடைபெற்றது.  இதில் கலந்து கொள்வதற்காக  அகமதாபாத் சென்ற ராகுல் காந்தி  அங்கு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.  

rahul

அப்போது  குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை அறிவித்தார்.  அதில், குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும் என்றார்.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும்,  3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம் என்றும் கூறினார்.  மேலும்  பா.ஜ.க. அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியதாக குற்றம் சாட்டினார்.  அத்துடன்   பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு  ரூ. 5 மானியம் வழங்கப்படும் என்று கூறிய அவர்,  தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றார்.  

ரூ. 500க்கு கேஸ் சிலிண்டர், இலவச மின்சாரம் - குஜராத் தேர்தலையொட்டி ராகுல் வாக்குறுதி..

சர்தார் படேல் விவசாயிகளின் குரலாக இருந்தார் எனவும், பா.ஜ.க. ஒரு பக்கம் அவரது உயரமான சிலையை உருவாக்கிவிட்டு  இன்னொரு பக்கம் அவர் யாருக்காக போராடினார்களோ அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று சாடினார். இதுதான் பாஜகவின் உண்மையான முகம் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி,  குஜராத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் வாங்கிய 3 லட்சம் வரை உள்ள கடன்கள்  தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார்.  வேலையில்லாத் திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடியும் என்றும்,   குஜராத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என்றும்,   குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என உறுதியளிக்கிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்..