மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் செயல்களும் வார்த்தைகளும் எப்போதும் பொருந்துகின்றன... ராஜ்நாத் சிங் பெருமிதம்

 
ரொம்ப பேச மாட்டாரு… ஆனா கருத்தா பேசுவாரு.. பாராட்டு மழையில் நனையும் ராஜ்நாத் சிங்…..

மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் (பா.ஜ.க.) செயல்களும் வார்த்தைகளும் எப்போதும் பொருந்துகின்றன என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமையாக தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் சிங்ராலியில் நடைபெற்ற கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகையில் கூறியதாவது: நாட்டில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நடத்தி, நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறும் ராகுல் காந்தியிடம், நாட்டில் வெறுப்பை பிறப்பிப்பவர் யார் என்று கேட்கிறேன்?. முன்பு போர் விமானங்கள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்பட பாதுகாப்பு துறைக்கான அனைத்தையும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம்.  

பாதுகாப்பு தளவாடங்கள்

ஆனால் தற்போது இந்தியாவிலேயே அனைத்தையும் தயாரிக்கவும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளோம். மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு ஏழை மக்களின் நலனுக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது. அதுான் ஒவ்வொரு பா.ஜ.க. அரசின் மந்திரம் மற்றும் குறிக்கோள். தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். மற்ற கட்சிகளை போல் இல்லாமல் எங்கள் செயல்களும் வார்த்தைகளும் எப்போதும் பொருந்துகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தியின் நடைப்பயணம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது ஜம்மு அண்ட் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடந்து வருகிறது. ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தின் போது, நாட்டில் வெறுப்பு பரப்பப்படுகிறது என்று அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். அதனை குறிப்பிட்டுதான் ராஜ்நாத் சிங் நாட்டில் வெறுப்பை பிறப்பிப்பவர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.