மசூதிகளிலிருந்து சட்டவிரோத ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.. ராஜ் தாக்கரே உறுதி

 
மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மசூதிகளிலிருந்து சட்டவிரோத ஒலிபெருக்கிகள் அகற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே உறுதியாக தெரிவித்தார்.


மகாராஷ்டிராவில் மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கிகளை மே3ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறினால் மாநிலத்தில் அடுத்து நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன் என மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே அம்மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற விதிமுறைகளை மீறி சில மசூதிகளில் ஆசான் ஒலிக்கப்பட்டதாகவும், இதனை தொடர்ந்து ராஜ் தாக்கரே கட்சியினர் ஒலி பெருக்கிகளில் ஹனுமன் கீர்த்தனைகளை இசைத்தாகவும் தகவல் வெளியானது. மேலும் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ராஜ்தாக்கரே

எங்கள் தொண்டர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என மாநிலம் முழுவதிலிருந்தும் அறிக்கைகள் கிடைத்தது. மகாராஷ்டிா நவ்நிர்மான் சேனா தொண்டர்கள் சட்டம் ஒழுங்கை கடைபிடித்தனர். மகாராஷ்டிராவில் நாங்கள் அமைதியாக விரும்புகிறோம். இன்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறிய அந்த 135 மசூதிகள் மீது மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. எங்கள் தொண்டர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கிறீர்கள், மசூதிகளில் ஆசான் ஒலித்தால், ஒலி பெருக்கி மூலம் ஹனுமன் கீா்த்தனைகளை இந்துக்கள் இசைக்க வேண்டும். இந்த சமூக இயக்கத்திற்காக என்னால் நற்பெயர் வாங்க முடியாது. எனது அழைப்பை பின்பற்றி அனைவருக்கும் நன்றி. 

உச்ச நீதி மன்றம்

மசூதிகளில் மட்டுமல்ல, பல கோயில்களிலும் சட்டவிரோதமாக ஒலி பெருக்கிகள் இயக்கப்படுகின்றன. இந்த இயக்கம் சட்டவிரோ ஒலி பெருக்கிகளுக்கு எதிரானது. இதை மதப் பிரச்சினை என்று கூறுவது நியாயமற்றது. மசூதிகளில் உள்ள அனைத்து சட்டவிரோத ஒலி பெருக்கிகளும் அகற்றப்பட வேண்டும் என்பது எனது கருத்து. அவை அகற்றப்படும் வரை நாங்கள் எங்கள் போராட்டங்களை தொடருவோம். அனைத்து சட்டவிரோத ஒலி பெருக்கிகளும் அகற்றப்படும் வரை ஆசான் நேரத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமன் கீர்த்தனைகளை இசைப்போம். உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மாநில அரசு பின்பற்றவில்லையென்றால் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.