அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் இந்திய ரயில்வேக்கு ரூ.259 கோடி நஷ்டம்.. மத்திய அரசு தகவல்

 
அக்னிபாத் தி்ட்டத்துக்கு எதிராக போராட்டம்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய அரசு அண்மையில் முப்படைகளில் இளைஞர்கள் சேர ஏதுவாக அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரையிலான இருபாலரும், 4 ஆண்டுகள் வரை முப்படைகளில்  பணிபுரியலாம். அதன்பிறகு சேவா நிதி எனப்படும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில்  இருந்து விடுவிக்கப்படுவர். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. மேலும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டங்களும் நடத்தின.  

அக்னிபாத் திட்டம்

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ் எரிப்பு, ரயில் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இருப்பினும், அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் பணிபுரிவதற்காக பல லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம் செய்தனர். இந்நிலையில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டது. துல்லியமாக கடந்த ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை நாட்டில் 2,132 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அக்னிபாத் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக பொதுமக்களின் குழப்பம் காரணமாக ரயில் சேவைகள் இளையூறு காரணமாக பயணிகளுக்கு திரும்ப வழங்கப்பட்ட பணம் தொடர்பாக தனி தரவு பராமரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.