வருண் காந்தியை சந்தித்து அவரை கட்டிப்பிடிக்க முடியும், ஆனால் அந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது...ராகுல் காந்தி

 
வருண் காந்தி

என்னால் நிச்சயமாக வருண் காந்தியை சந்தித்து அவரை கட்டிப்பிடிக்க முடியும், ஆனால் அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது பஞ்சாபில் நடந்து வருகிறது. ராகுல் காந்தி தனது நடைப்பயணத்துக்கு நடுவே நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வருண் காந்தி பா.ஜ.க.வில் இருக்கிறார். அவர் இங்கு (இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில்) நடந்தால் அது அவருக்கு பிரச்சினையாக இருக்கலாம். என்னுடைய சித்தாந்தம் அவருடைய (வருண் காந்தி) சித்தாந்தத்துடன் ஒத்துப் போகவில்லை. என்னால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு செல்ல முடியாது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு செல்ல  வேண்டும் என்றால் என் தலையை துண்டிக்க வேண்டும். என் குடும்பத்திற்கு ஒரு சித்தாந்தம் உள்ளது. வருண் காந்தி இன்னொன்றை ஏற்றுக் கொண்டார், அந்த சித்தாந்தத்தை என்னால் ஏற்க முடியாது. என்னால் நிச்சயமாக அவரை சந்தித்து அவரை கட்டிப்பிடிக்க முடியும், ஆனால் அந்த சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ராகுல் காந்தி

வெறுப்பு மற்றும் பிரிவினையின் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதையும், நமது அரசியல் அமைப்பின் அதிகப்படியான அதிகப்படியான மையமாக்கலையும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நோக்கமாக கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பா.ஜ.க.  பெரும் பாதிப்பை சந்திக்கும் என்பது தெள்ளத்  தெளிவாக தெரிகிறது. பா.ஜ.க. மீது மக்கள் மத்தியில் பெரும் கோபம் உள்ளது. ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. நிருபர்கள் அதிகம் தவறு செய்யவில்லை. உங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. உங்கள் உரிமையாளர் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும். நீங்கள் சொல்வதால் எனக்கு  புரிகிறது. நான் உங்களை விமர்சிக்கவில்லை. நான் ஊடகங்களின் கட்டமைப்பை விமர்சிக்கிறேன். 

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

காங்கிரஸின் தத்துவம் ஒரு சுதந்திரமான ஊடகம் மற்றும் நிறுவனங்களை கொண்டது. காங்கிரஸ் ஊடகங்களை கட்டுப்படுத்த விரும்பினாலும் அதை செயல்படுத்தும் திறன் எங்களிடம் இல்லை, ஏனெனில் எங்களது அமைப்பு பா.ஜ.க.வைப் போல மையப்படுத்தப்படவில்லை. சுதந்திரமான மற்றும் நியாயமான ஊடகங்களை நாங்கள் விரும்புகிறோம். ஊடகங்களில் வெறுப்பு பரப்பப்படுகிறது. ஊடகங்கள் கண்காணிப்பு அமைப்பாக இருப்பதற்கு பதிலாக கவனத்தை சிதறடிக்கும் பாத்திரத்தை வகிக்கின்றன. உங்கள் பங்கு ஒரு கண்காணிப்பாளராக இருக்க வேண்டும். சிறு வணிகர்கள் நசுக்கப்படுகிறார்கள். விவசாயிகள் சூறையாடப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் இந்து-முஸ்லிம், பாலிவுட், விளையாட்டு என்று திசைதிருப்புகிறீர்கள். உங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால், நாங்கள் இங்கு வழங்கிய தரவுகளை பற்றி நீங்கள் கேட்டிருப்பீர்கள். விவசாயிகள் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு பிரச்சினைகள் போன்ற பிரச்சினைகளை நீங்கள் எழுப்ப வேண்டும். அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் ஊடகங்களை நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் காங்கிரஸ் அரசாங்களுக்கு கருத்து தெரிவிக்கும் சேனல்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.