ராணுவம் ஆதாரம் அளிக்க தேவையில்லை.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான திக்விஜய சிங்கின் கருத்து கட்சியின் கருத்துக்கள் அல்ல, ராணுவம் ஆதாரம் அளிக்க தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங் நேற்று முன்தினம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். திக்விஜய சிங் பேசியதாவது: சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக அவர்கள் (மத்திய பா.ஜ.க. அரசு) கூறினர். ஆனால் அதற்கான ஆதாரம் காட்டவில்லை. அவர்கள் பொய்களை மட்டுமே பரப்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு திக்விஜய சிங் ஆதாரம் கேட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பலர் திக்விஜய சிங்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவம் குறித்து கேள்வி கேட்டதற்காக திக்விஜய சிங்கையும், காங்கிரஸையும் தேசவிரோதிகள் என்று பா.ஜ.க. சாடியது. மேலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க  வேண்டும் என்றும் பா.ஜ.க. வலியுறுத்தியது.

பா.ஜ.க.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவை பிரிக்க செய்கிறார்கள். திக்விஜய சிங் விஷமத்தனமான கருத்துக்களின் அடையாளமாகி விட்டார். இராணுவத்தின் மீதான நம்பிக்கை உடைக்க முடியாதது மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததாக ராணுவம் சொன்னால் எப்படி திரும்ப திரும்ப ஆதாரம்  கேட்க முடியும். நம் ராணுவத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பொறுப்பற்ற அறிக்கைகளை அளிப்பது காங்கிரஸின் குணாதிசயமாகி விட்டது. ஆனால் இந்திய ராணுவத்துக்கு எதிரகா பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது. நரேந்திர மோடி மீது உள்ள வெறுப்பால் ராகுல் காந்தியும்  திக்விஜய சிங்கும் கண்மூடித்தனமாக இருப்பது போல் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவம்

இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான திக்விஜய சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், திக்விஜய சிங்கின் கருத்துடன் நாங்கள் உடன்படவில்லை. கட்சியின் கருத்துகள் திக்விஜய சிங்கின் கருத்துக்களுக்கு மேலானவை.  கட்சியின் கருத்துக்கள் உரையாடலில் இருந்து உருவாக்கப்படுகின்றன. திக்விஜய சிங்கின் கருத்துக்கள் அபத்தமானது. அவை கட்சியின் கருத்துக்கள் அல்ல. நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம். ஆயுதப்படைகள் (ராணுவம்) ஒரு வேலையை செய்கின்றன, அந்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள். அவர்கள் ஆதாரம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.