முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

 
rahul gandhi

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவின் உடலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சரும்,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75.  சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் யாதவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சரத் யாதவ் மயக்கமடைந்த நிலையில் குருகிராம் போர்டிஸ் நினைவு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும் அப்போதிலிருந்தே அவரின் உடலில் நாடித்துடிப்பு இல்லை என்றும் அதனால் அவரை காப்பாற்ற முடியாமல் போனது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. சரத் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரத் யாதவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'ஷரத் யாதவ் ஜி-யிடம் இருந்து அரசியல் பற்றி நிறைய கற்றுக்கொண்டேன். இன்று அவரது மறைவு என்னை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் எனது தந்தையுடன் மரியாதைக்குரிய நட்புறவைக் கொண்டிருந்தார். இவ்வாறு கூறினார்.