ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட பயணி - பதபதைக்க வைக்கும் வீடியோ

 
train

பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை, ரயில்வே போலீசார் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

பெங்களூரு கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் வழக்கம் போல் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மறுபக்கத்தில் உள்ள நடமேடையில் இருந்து ரயில்வே தண்டவாளங்களை தாண்டி மற்றொரு புறம் உள்ள நடைமேடைக்கு செல்வதற்காக ஒரு நபர் ரயில்வே தண்டவாளத்தை கடந்துள்ளார். இந்நிலையில், தண்டவாளத்தில் இருந்து நடைமேடை உயரமாக இருந்ததால் அவரால் நடைமேடையில் ஏற முடியவில்லை. எவ்வளவு முயற்சித்து பார்த்தும் மேலே ஏற முடியாத அந்த நபர் சிறிது நேரத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இந்த நிலையில், அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால் அந்த ரயில் நிலையமே பெரும் பரபரப்பான நிலையில், அங்கிருந்த ரயில்வே போலீசார் உடனடியாக விரைந்து சென்று அந்த நபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ரயில் அருகில் வருவதற்குள் அந்த நபரை மீட்டு நடைமேடைக்கு கொண்டு வந்தனர். ரயில்வே போலீசாரின் உடனடி நடவடிக்கையால் அந்த நபர் உயர்தப்பினார். 


தங்களது உயிரை பணயம் வைத்து ரயில்வே தண்டவாளத்தில் இறங்கி பயணியை மீட்ட ரயில்வே போலீசாரை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே தண்டவாளத்தில் தவறி விழுந்த நபரை, ரயில் வருவதற்குள் ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.