குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ 5.40 சதவிகிதமாக அதிகரிப்பு...

 
ரெப்போ வட்டி

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

 வங்கிகளில் கடந்த மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக இருந்தது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு 4.9% ஆக இருந்த நிலையில் தற்போது,   5.4% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து   டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம்,  வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.  

ரெப்போ வட்டி விகிதம்

உலக அளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் வட்டி விகிதம்  அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,   வட்டி விகிதம் உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து 1,330 கோடி டாலர் முதலீடு வெளியேறி இருக்கிறது. மேலும்.  பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக  நிலையான டெபாசிட் விகிதத்தை 5.15%ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.  இந்நிலையில் இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் வீடு, வாகன மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 சக்திகந்த தாஸ்

 அத்துடன் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளதால் பணவீக்கத்தோடு கூடிய பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும்,  பிற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர்,   சர்வதேச பிரச்சனைகளால் இந்திய பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளானதாகவும்,  சந்தையின் நிலையற்ற தன்மையால் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.