குறைவான அறிவு எப்போதும் ஆபத்தானது. அதைத்தான் ராகுல் காந்தி நிரூபித்து வருகிறார்... பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பதிலடி

 
பகவந்த் மான்

குறைவான அறிவு எப்போதும் ஆபத்தானது. அதைத்தான் ராகுல் காந்தி மாநிலத்தில் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்டு நிரூபித்து வருகிறார் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று  வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது பஞ்சாபில் நடந்து கொண்டிருக்கிறது.  கடந்த திங்கட்கிழமையன்று ராகுல் காந்தி பேட்டி ஒன்றில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ரிமோட் கண்ட்ரோலாக இல்லாமல் பஞ்சாபில் இருந்து மாநில அரசை இயக்க வேண்டும் என்று தாக்கி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பகவந்த் மான் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பகவந்த் மான் கூறியதாவது:

ராகுல் காந்தி

ஜனநாயகம் அல்லது ஜனநாயக நெறிமுறைகள் பற்றி எதுவும் கூற ராகுல் காந்திக்கு தார்மீக உரிமை இல்லை. எங்கள் கட்சிக்கு ஆதரவாக பெரும் ஆணை வழங்கி நான் முதல்வராக பஞ்சாப் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதை காந்தி வாரிசுக்கு நினைவூட்டுகிறேன். ராகுல் காந்தியால் முதல்வராக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி போலல்லாமல், மக்களுக்கு சேவை செய்ய மக்களால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன். குறைவான அறிவு எப்போதும் ஆபத்தானது. அதைத்தான் ராகுல் காந்தி மாநிலத்தில் ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிட்டு நிரூபித்து வருகிறார்.

கேப்டன் அமரீந்தர் சிங்

 முதல்வர்களை கைப்பாவையாக நடத்தி ஜனநாயக நெறிமுறைகளை சீர்படுத்த முடியாத சேதத்தை காங்கிரஸ் ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தையும் வெளியிடும் முன் ராகுல் காந்தி தனது மனசாட்சியை எட்டிப்பார்க்க வேண்டும். முன்பு ராகுல் காந்தி தானே கேப்டன் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து இறக்கி அவமானப்படுத்தினார். நாட்டில் ஜனநாயகத்தின்கொலையால் அவரது குடும்பத்தின் கைகள் நனைந்துள்ளன. இந்த பாவத்தை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்பதை காங்கிரஸ் தலைவர் மறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.