சிறையில் தனியறை.. மனைவியுடன் கைதிகள் 2 மணி நேரம் தனிமை..

 
p

சிறையில் உள்ள கைதிகள் தங்கள் மனைவியுடன் தனிமையில் இருப்பதற்கு சிறையில் தனியறை அமைக்கப்பட்டு இருக்கிறது.   மாநில அரசும் இதற்கு அனுமதி அளித்திருக்கிறது.  

 குற்றம் செய்தவர்கள் தங்களின் தவறுகளை மீண்டும் செய்யாமல் திருந்தி வாழ்வதற்கான இடமாக சிறை இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமாக இருக்கிறது.  ஆனால் பல வருடங்களாக சிறையில் இருப்பதால் குடும்பத்தை விட்டு தனியாக சிறையில் வாடும் கைதிகளின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக அவர்களுக்கு மனைவியுடன் உறவு இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர் என்ற விவாதம் நீண்ட நாளாக இருந்து வருகிறது.

 இந்த குறையை போக்கும் விதமாக திருமண பந்தத்தை வலுப்படுத்தும் விதமாக பஞ்சாப் மாநில அரசு ஒரு திட்டம் கொண்டு வந்திருக்கிறது.  பஞ்சாபில் லூதியானாவில் இருக்கும் சிறையில் கைதிகள் தங்களின் மனைவிகளுடன் சிறையில் உள்ளே இரண்டு மணி நேரம் தனிமையில் இருப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.   மூன்று மாதத்திற்கு ஒருமுறை இப்படிய அனுமதி வழங்கப்படுகிறது.  

pr

 அதுவும் கொடூரமான குற்றங்களை செய்தவர்கள், தாதாக்கள், ரவுடிகள், ஆபத்தான கைதிகள் ,பாலியல் குற்றத்தில் சிக்கிய குற்றவாளிகள் ஆகியோருக்கு இந்த சலுகைகள் அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.   நல்லொழுக்கத்துடன் சிறையில் நடந்து கொள்கின்ற  கைதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 கைதிகள் தங்களின் மனைவியுடன் சிறையில் தனிமையில் இருக்க பிரத்தியேகமாக சிறையில் பாத்ரூம் வசதியுடன் அறை அமைக்கப்பட்டிருக்கிறது.  சிறையில் உள்ள தங்களின் கணவர்களை மனைவிகள் சந்திப்பதற்கு முன்பாக சிறை நிர்வாகத்திடம் திருமண சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் ,எச்ஐவி இல்லாத சான்றிதழ், பாலியல் தொடர்பான நோய் இல்லை என்பதற்கான ஆதாரம் கொரோனா சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது.   இந்தியாவிலேயே இந்த திட்டத்தை பஞ்சாப் மாநிலம் தான் முதன்முறையாக தொடங்கி இருக்கிறது. 

 கடந்த சில தினங்களுக்கு முன்பு அம் மாநில அரசு இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது.  பஞ்சாபில் லூதியான சிறையில் இத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.