எரிபொருள் மீதான வாட் வரியை குறையுங்க.. தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களை வலியுறுத்திய மோடி

 
பிரதமர் மோடி

எரிபொருள் மீதான வாட் வரியை குறையுங்க என தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்வர்களிடம், கடந்த 2 ஆண்டுகளில் இது நமது 24வது கொரோனா வைரஸ் சந்திப்பாகும். மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட விதம், கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. கோவிட்-19க்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பெட்ரோல் பம்ப்

மேலும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என 7 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி இது தொடர்பாக பேசுகையில், கடந்த ஆண்டு நவம்பரில் எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை.

வாட் வரி

நான் யாரையும் விமர்ச்சிக்கவில்லை. ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இப்போது வாட் வரியை குறைத்து மக்களுக்கு பலன்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மோடி குறிப்பிட்ட 7 மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.