பரபரப்பு வீடியோ! திறந்த காரில் பிரதமர் மோடி.. பாய்ந்து வந்த இளைஞர்..

 
m

திறந்த காரில் பேரணியாகச் சென்ற பிரதமர் மோடியை நோக்கி  இளைஞர் ஒருவர் மாலையுடன் பாய்ந்து வந்ததால் அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.   அவரை அப்புறப்படுத்திய போது அந்த பரபரப்பிலும் அந்த இளைஞரின் கையில் இருந்த மாலையை பிரதமர் மோடி வாங்கிக் கொண்டார்.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 2023 ஆம் ஆண்டுக்கான 26 வது தேசிய இளைஞர் திருவிழா கர்நாடக மாநிலத்தில் ஹப்பள்ளி நகரில் நடைபெறுகிறது.   பிரதமர் மோடி இந்த திருவிழாவை தொடங்கி வைக்கிறார்.   இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி,  திறந்த காரில் சாலை வழியே பேரணியாக பயணித்தார்.


 வழி நெடுகிலும் சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அவர்களுக்கு கையசைத்தபடியே திறந்த காரில் நின்று கொண்டு சென்று கொண்டிருந்தார் பிரதமர் மோடி.   பாதுகாப்பு உயர் அதிகாரிகளும் கூடவே சென்றனர்.

 இத்தனை பலத்த பாதுகாப்பையும் மீறி பேரணியின் நடுவில் திடீரென்று இளைஞர் ஒருவர் கையில் மாலையுடன் பிரதமர் மோடியை நோக்கி பாய்ந்து சென்றார்.  சற்றும் இதை எதிர்பாராத பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.   பிரதமர் மோடியை நெருங்கி விட்டார் அந்த இளைஞர்.   அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த இளைஞரை அப்புறப்படுத்திய போது,  அவர் அந்த மாலையை பிரதமரின் கழுத்தில் போட முயன்றார்.

 அந்த இளைஞரின் உணர்வை புரிந்து கொண்ட பிரதமர்,  அவரின் கையில் இருந்த மாலையை வாங்கிக் கொண்டார்.   பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை அப்புறப்படுத்தினார்கள்.  இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.