15வது குடியரசு தலைவராக இன்று பதவியேற்கிறார் திரௌபதி முர்மு.. வெங்கையா நாயுடு, மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

 
திரௌபதி முர்மு

நாட்டின் 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்கிறார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும்  , எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில், திரௌபதி முர்மு பெரும்பான்மையான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரௌபதி முர்முவிடம் கடந்த வெள்ளிக்கிழமையன்று தேர்தல் ஆணையம் வழங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10.15 மணிக்கு இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.  

ராம் நாத் கோவிந்த்

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பதவி விலகும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் ஒன்றாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள். நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் அரங்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா,  திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். இந்திய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றவுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். பின்னர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார்.

என்.வி.ரமணா

இந்திய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில், குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சரவை குழு, கவர்னர்கள்,  முதல்வர்கள், தூதரக பணிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் முதன்மை சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.