நாளை குடியரசு தலைவர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகிக்கோங்க யஷ்வந்த் சின்ஹா.. அம்பேத்கர் பேரன் வேண்டுகோள்

 
பிரகாஷ் அம்பேத்கர்

நாளை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், குடியரசு தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுமாறு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அம்பேத்கர் பேரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து வரும் ஜூலை 18ம் தேதியன்று குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. குடியரசு தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். நாளை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், குடியரசு தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுமாறு யஷ்வந்த் சின்ஹாவுக்கு அம்பேத்கர் பேரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா

இது தொடர்பாக பாபாசாகேப் அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாடியின் தேசிய தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் விடுத்துள்ள அறிக்கையில், திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க பல கட்சிகளை சேர்ந்த பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்) இணைந்திருப்பதால், யஷ்வந்த் சின்ஹாவை குடியரசு தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

இதற்கிடையே, குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க போவதாக உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா அறிவித்ததால், யஷ்வந்த் சின்ஹா நேற்று மேற்கொள்ள இருந்த மும்பை பயணத்தை ரத்து செய்தார். இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், மும்பையில் மகா விகாஸ் அகாடி சட்டப்பேரவை உறுப்பினர்களை சந்தித்து பேசுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த  சின்ஹாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.