நிதிஷ் குமாரை ராமர், கிருஷ்ணராகவும், மோடியை ராவணன், கம்சனாகவும் சித்தரித்து லாலு கட்சி போஸ்டர்.. பீகாரில் பரபரப்பு

 
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் வைத்துள்ள பேனர்

பீகாரில் லாலு கட்சி அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை ராமர் மற்றும் கிருஷ்ணராகவும், பிரதமர் மோடியை ராவணன் மற்றும் கம்சனாகவும் சித்தரித்து லாலு கட்சி வைத்துள்ள பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அரசாங்கம் நடந்து வருகிறது. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பாட்னா அலுவலகம் மற்றும் ரப்ரிதேவியின் வீட்டுக்கு வெளியே, நிதிஷ் குமாரை ராமனாவும், கிருஷ்ணராகவும் அதேசமயம் மோடியை ராவணன் மற்றும் கம்சனாகவும் சித்தரித்து வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதிஷ் குமார்

ராஷ்டிரிய ஜனதா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில் படங்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டள்ளது. முதல் இரண்டு பகுதிகளில் ராமாயணத்தில் ராமர் ராவணனை எவ்வாறு தோற்கடித்தார் மற்றும் மகாபாரதத்தில் கிருஷ்ண பகவான் கம்சனை எவ்வாறு தோற்கடித்தார் என்பதை விவரிக்கிறது. பேனரின் கடைசி பகுதி மகா கூட்டணியை காட்டுகிறது. 2024 மக்களை தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பிரதமர் மோடியை தோற்கடிக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் பூனம் ராயின் படத்துடன் மகா கூட்டணி ஆதரவு வசனங்களும் அந்த பேனரில் இடம் பெற்றுள்ளது.

மோடி

அதேசமயம் அந்த பேனர் யார் வைத்தது என்று தெரியவில்லை என்றும், அதை எங்கள் கட்சியால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மிருதுஞ்சய் திவாரி தெரிவித்தார். இந்நிலையில் பேனர் விவகாரத்துக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் நவல் கிஷோர் யாதவ் கூறுகையில், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களிலும் நிதிஷ் குமார் புதியவர். பிரதமர் நரேந்திர மோடி 2034 வரை ஆட்சியில் இருப்பார். அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது என தெரிவித்தார்.