நாடாளுமன்றம் திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு...

 
நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகள்  மற்றும்  ஆளும் கட்சி உறுப்பினர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம்  திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.  

 நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர்   கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல்தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்  தொடரில் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி , அக்னிபாத் உள்ளிட்ட  பல்வேறு  பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.  அத்துடன் மத்தியில்  ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை   எதிர்த்து தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில்  ஈடுபட்டு வருவதால், மழைக்கால கூட்டத்தொடரே  தொடர்ந்து  முடங்கியது.  ஏற்கனவே  அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, மக்களவை - மாநிலங்களவை என  இரு அவைகளிலும் சேர்த்து 27 உறுப்பினர்கள்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

நாடாளுமன்றம்

இந்நிலையில் இன்று காலை மக்களவைக் கூடியதும்   எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும்  அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இதனையடுத்து  பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் சிலர்  அவர்களுக்கு பதில் அளிக்கும்  விதமாக குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம்  ஏற்பட்டது.  அப்போது உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு  சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி பலமுறை கேட்டுக் கொண்டார்.  இருந்தபோதிலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால, முதலில்  12 மணி வரை அவை  ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றம் திங்கள் கிழமை வரை ஒத்திவைப்பு...

பின்னர் அவை கூடிய நிலையில் தொடர்ந்து உறுப்பினர்களின்  அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி  கோஷமிட்டனர்.  பின்னர் இதற்கு பதிலடி  கொடுக்கும் விதமாக குடியரசுத் தலைவர் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் உறுப்பினருக்காக அக்கட்சித் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.  உறுப்பினர்கள் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதை அடுத்து, மக்களவை போலவே  முதலில் நண்பகல் 12 மணி வரையிலும்,  பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவையும்  ஒத்தி வைக்கப்பட்டது.  நாளையும் (  சனிக்கிழமை ), நாளை மறுநாளும் ( ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மீண்டும் நாடாளுமன்றம் திங்கள் கிழமையே கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.,