துணை ஜனாதிபதி தேர்தல் - முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் மோடி

 
pm modi pm modi

நாட்டின் அடுத்த குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிதமர் மோடி முதல் நபராக வாக்களித்தார். 

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக சார்பில்  மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கர் நிறுத்தப்பட்டுள்ளார். இதேபோல் எதிர்கட்சிகளின்  பொது  வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா  அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 10 மணி தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. 

vice president

வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.  பாஜகவிற்கு மக்களவையில் 303, ராஜ்யசபாவில் 91 என, மொத்தம் 394 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் உள்ளதால், 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று பாஜக சார்பில் போட்டியிடும் ஜக்தீப் தன்கர் எளிதாக வெற்றி பெறுவார் என கூறப்படுகிறது. 

குடியரசு துணை தலைவருக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் நபராக வாக்களித்தார். இதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.