சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் 8 பேர் பலி - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

 
pm modi

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் பொதுக்குட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா - பாமுரு சாலையில் உள்ள  கந்துகூரில் உள்ள என்டிஆர் சந்திப்பு அருகே தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபுவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த  8 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும்,  அவர்களின் குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்பு செலவை தெலுங்கு தேசம் கட்சி கவனித்துக்கொள்ளும் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். உதவித் தொகையாக, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.