கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

 
monkeypox

கேரளாவில் ஏற்கனவே மூன்று பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மையின் தாக்கம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் குரங்கம்மை நோய் உலக சுகாதார அவசரநிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் நேற்றுவரை 6 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த ஒருவர் குணமடைந்துள்ளார்.  

இந்நிலையில், கேரளாவில் இன்று மேலும் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 30 வயதான நபருக்கு குரக்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் குரங்கம்மை அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடதக்கது.