2024ல் மத்தியில் ஆட்சி அமைத்தால் அனைத்து பின்தங்கிய மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்த்து.. நிதிஷ் குமார் வாக்குறுதி

 
நிதிஷ் குமார்

2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அரசாங்கத்தை அமைக்க எங்களுக்கு (எதிர்க்கட்சிகள் கூட்டணி) வாய்ப்பு கிடைத்தால், அனைத்து பின்தங்கிய மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான  நிதிஷ் குமார், 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையை மிகவும்  தீவிரமாக மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று நிதிஷ் குமார், அடுத்த அரசாங்கத்தை அமைக்க எங்களுக்கு (எதிர்க்கட்சிகள் கூட்டணி) வாய்ப்பு கிடைத்தால், அனைத்து பின்தங்கிய மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்படும். அதை செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்தார்.

பா.ஜ.க.

ஒரு மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், மத்திய அரசின் திட்டங்களில் மத்திய-மாநில நிதியுதவி விகிதம் 90:10 சதவீதமாக இருக்கும். அதாவது திட்டத்தின் மொத்த மதிப்பில் 90 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும் எஞ்சிய 10 சதவீதத்தை மட்டுமே மாநில அரசு கொடுக்க வேண்டும். இது மற்ற மாநிலங்களுக்கான விகிதத்தை விட மிகவும் சாதகமானது. தற்போது நம் நாட்டில் சிறப்பு அந்தஸ் பெற்ற  மாநிலங்கள் 11  உள்ளன. அருணாச்சல பிரதேசம், அசாம், இமாச்சல பிரதேசம், ஜம்மு அண்ட் காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்தவொரு ஏற்பாடு இல்லை. இருப்பினும், இப்போது செயல்படாத திட்டக்குழுவின்  ஒரு பகுதியாக இருந்த தேசிய வளர்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பு பல காரணிகளின் அடிப்படையில் இந்த 11 மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து பரிந்துரைத்தது. அதேசமயம், 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்ட பிறகு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து என்ற கருத்து மறைந்தது. இருப்பினும், பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை பின்தங்கிய நிலை மற்றும் வறுமையை காரணம் காட்டி சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.