எனக்காக எதுவும் வேண்டாம், எனக்கு ஒரே ஒரு கனவு உள்ளது.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

 
நிதிஷ் குமார்

எனக்காக எதுவும் வேண்டாம். எனக்கு ஒரே ஒரு கனவு-எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். அது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

தெலங்கானாவில் உள்ள கம்மத்தில் நேற்று முன்தினம் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் தலைமையில் அந்த கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கே.சந்திரசேகர் ராவ் அழைப்பின்பேரில், இந்த கூட்டத்தில்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி முன்னணி நோக்கிய முதல் பெரிய படியாக இந்த கூட்டம் பார்க்கப்படுகிறது.

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் வாக்கு வங்கி அரசியல் செய்கிறார்… பா.ஜ.க. குற்றச்சாட்டு..

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை மேற்கொண்டு வரும்  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் அழை்ககப்படாததால் தான் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று நிதிஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் பேசுகையில் கூறியதாவது: கே.சந்திரசேகர் ராவ் நடத்தும் பேரணி பற்றி எனக்கு தெரியாது. 

அரவிந்த் கெஜ்ரிவால்

நான் வேறு சில வேலைகளில் பிஸியாக இருந்தேன். அவருடைய கட்சியின் பேரணிக்கு அழைக்கப்பட்டவர்கள் அங்கு சென்றிருக்க வேண்டும். நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். எனக்காக எதுவும் வேண்டாம். எனக்கு ஒரே ஒரு கனவு-எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும். அது நாட்டுக்கு நன்மை பயக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.