மும்பையிலிருந்து டெல்லிக்கு சாலை மார்க்கமாக 12 மணி நேரத்தில் செல்வேன் என்பது என் கனவு.. நிதின் கட்கரி

 
ஸ்பீடா போனதற்கு நானே அபராதம் கட்டி இருக்கேன்.. நிதின் கட்கரி தகவல்

மும்பையிலிருந்து டெல்லிக்கு சாலை மார்க்கமாக 12 மணி நேரத்தில் செல்வேன் என்பது என் கனவு என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி, மும்பையில் இருந்து டெல்லிக்கு சாலை மார்க்கமாக 12 மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்பது உள்பட தனது அமைச்சகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு நாள் நரிமன் பாயிண்டில் ஒரு கப் காபி குடித்து விட்டு, அடுத்த 12 மணி நேரத்தில் டெல்லியை அடைவேன் என்பது என் கனவு.

மும்பை-டெல்லி நெடுஞ்சாலை

இதற்காக திட்டம் வகுத்து ஆலோசகர்களுடன் பேசினேன். மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய நான் (அமைச்சகம்) தயாராக உள்ளேன். ஜே.என்.பி.டி. வரை இருக்கும் மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன. 2024ம் ஆண்டுக்குள் நம் நாட்டில் சாலை விபத்துக்களை பாதியாக குறைக்க சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. 

விபத்து

இப்போது நிர்மானிக்கப்படும் சாலைகள் பல பரிசீலனைகளுக்கு பின்னரே போடப்படுகின்றன. சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதில் நான் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை என்பதை நான் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.