சட்டவிரோத லோன் ஆப்களை ஒழிக்க நடவடிக்கை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

 
nirmala

இந்தியாவில் கடன் செயலிகளால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கும் விதமாக சட்டவிரோத கடன் கடன் வழங்கும் செயலிகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத லோன் ஆப்புகள் செயல்பட்டு வருகின்றன. எளிதில் கடன் வழங்குவதாக வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் இந்த கும்பலால் நாட்டில் தற்கொலைகள் நடந்து வந்தன. இதனையடுத்து சட்டவிரோத கடன் செயலிகளை ஒழித்துக்கட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சட்டவிரோத கடன் செயலிகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

LOAN APPS

இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஜிட்டல் தளங்களில் காணப்படும் இந்த சட்டவிரோத செயலிகளின் செயல்பாடுகள் குறித்து கவலை தெரிவித்தார். ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் செயலிகள் மட்டுமே செயல்பட முடியும் எனவும், ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். மேலும் கடன் செயலிகளால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கும் விதமாக சட்டவிரோத கடன் கடன் வழங்கும் செயலிகளை ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.