பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

 
fire

டெல்லில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் உள்ள ஒரு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே இயங்கி வரும் வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 30 பேர் உடல் கருகி பலியாகினர். அத்துடன் 40ற்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரை காணவில்லை. இதனால் இந்த தீ விபத்தில் மேலும் பலர் உயிரிழக்கலாம் என்று கூறப்படுகிறது. வணிக வளாக தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.  மேலும் தீவிபத்து ஏற்பட்ட வணிக வளாகத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். 


இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு நானக் தேவ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. புறநோயாளிகள் பிரிவின் அருகில் இருந்த மின்மாற்றிகளில் உள்ள ஆயில் டேங்குகளில் திடீரென தீப்பற்றியது. அவை வெடித்ததில் அருகில் உள்ள மருத்துவமனைக் கட்டடத்திலும் தீப்பற்றியது. உடனடியாக மின்னோட்டம் துண்டிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள கட்டடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 8 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர். கோடைக்காலத்தில் அதிக வெப்பம் காரணமாக மின்மாற்றியில் உள்ள ஆயில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதனிடையே இந்த சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை குஷ்பு என்ன நடக்கிறது? நேற்று டெல்லி, இன்று பஞ்சாப் என கேள்வி எழுப்பியுள்ளார்.