மங்களூர் குண்டுவெடிப்பு : தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு..

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்கிற அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோ குக்கர் குண்டுவெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஷாரிக் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் , கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள கர்நாடகா காவல்துறை, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும், முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, சென்னை வந்து சென்றதும், கேராளவில் தங்கி சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவர் யார் யாரை சந்தித்து சென்றார் என்ற கோணங்களில் விசாரணை நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிக் ரெசிடென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள கடிதத்தில், தட்சினகன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள மஞ்சுநாத் கோவிலை முகம்மது ஷாரிக் தகர்க்க திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில் இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என்றும் அதில் கூறியுள்ளது. கர்நாடக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கின் புகைப்படத்துடன் இந்த கடிதம் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இதுபோன்ற ஒரு அமைப்பை இதுவரை அறிந்தது இல்லை என்றும், அந்த கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.