ராஜ் தாக்கரேவின் கெடு முடிந்தது.. பதை பதைப்பில் மகாராஷ்டிரா.. போலீசாரின் விடுமுறை ரத்து

 
ராஜ்தாக்கரே

மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற ராஜ் தாக்கரே கொடுத்த கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்ததால், மகாராஷ்டிராவில் எப்போது என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பு நிலவுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா கட்சியின் கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: மசூதிகளில் இருந்து ஒலி பெருக்கிகளை மே 3ம் தேதிக்குள் (நேற்று) அகற்ற வேண்டும். அகற்றவில்லையென்றால் அடுத்து வரும் நாட்களில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். மே 4 முதல் அனைத்து இந்துக்களும் ஹனுமன் கீர்த்தனைகளை மசூதிகளில் மேல் உள்ள ஒலி பெருக்கிகளின் அளவை விட இரட்டிபாக இசைக்க வேண்டும். அவர்கள் (முஸ்லிம்கள்) சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் நாங்கள் அவர்களுக்கு மகாராஷ்டிராவின் சக்தியை காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மசூதிகளில் ஒலி பெருக்கிகளை நீக்குவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் மகராஷ்டிராவில் என்ன நடக்குமோ என்ற பதை பதைப்பில் அனைத்து தரப்பினரும் உள்ளனர். இந்நிலையில், போலீசாரின் அனைத்து விடுமுறைகளையும் அம்மாநில காவல்துறை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிரா டி.ஜி.பி. ரஜ்னிஷ் சேத் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: மகாராஷ்டிரா காவல்துறை எந்த வகையான சட்டம் ஒழுங்கு சூழ்நிலையையும் கையாளும் திறன் கொண்டது. 

மகாராஷ்டிரா போலீஸ்

காவல்துறையினரின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 87 கம்பெனி ரிசர்வ் போலீஸ் படையும், 30 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது காவல்துறையின் பொறுப்பு. யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது கடும நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.