சத்ரபதி சிவாஜி இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார்.. சர்ச்சையை கிளப்பிய மகாராஷ்டிரா கவர்னர் பேச்சு

 
பகத் சிங் கோஷ்யாரி

சத்ரபதி சிவாஜி இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார் என்று மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றுகையில் கூறியதாவது: உங்கள் லட்சிய மனிதர் யார் என்று யாராவது கேட்டால், நீங்கள் அவரை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. மகாராஷ்டிராவில் நீங்கள் அவர்களை காணலாம்.

சத்ரபதி சிவாஜி

சத்ரபதி சிவாஜி மகாராஜ் இப்போது பழைய லட்சிய மனிதராகி விட்டார், பாபாசாகேப் அம்பேத்கர் முதல் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வரையிலான தலைவர்களில் ஒரு புதிய லட்சிய மனிதரை நீங்கள் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். சத்ரபதி சிவாஜியை பழைய லட்சிய மனிதர் என்று கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி குறிப்பிட்டது பல அரசியல் கட்சி  தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

ஆதித்யா தாக்கரே,  ஆனந்த் துபே

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவ சேனா பிரிவின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் துபே கூறுகையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் நமது தெய்வம் மட்டுமல்ல,நமக்கு உத்வேகத்தின் ஆதாரம்,அவர் எப்போதும் நம் அனைவருக்கும் லட்சிய மனிதராக இருப்பார் கவர்னரின் அறிக்கையின்படி, ராமர் மற்றும் கிருஷ்ணர் கூட பழைய லட்சியவாதிகளாக மாறிவிட்டனர், வழிபடுவதற்கு இப்போது புதிய தெய்வங்களை கண்டுபிடிக்க வேண்டுமா? கவர்னரின் அறிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.