ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர் கைது

 
MP Arrest


மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரே ஊசி மூலம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவரை போலீசார் கைது செய்தனர். 

கொரோனா தொற்று உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. தடுப்பூசிகள் வந்த பின்னரும் கூட அதன் தாக்கமானது குறையாமல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் இருந்து மக்கள் பாதுகாத்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

vaccine

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரிலுள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரெ சிரஞ்சில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா என்ற நபர், இதுகுறித்து விளக்கம் அளித்த போது, பொருள்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார் அதனால் அதை வைத்தே அனைவருக்கும் செலுத்தினேன் என மெத்தனமாக பதில் அளித்துள்ளார்.  இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது?" என அலட்சியமாக பதில் கூறியுள்ளார். 

இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை அதை ஆய்வு செய்யுமாறு, பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ஜிதேந்திரா செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஜிதேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர்.