தற்போது ஆளும் அரசாங்கத்தை ஒவ்வொரு தனிமனிதனும் கேள்வி கேட்க முடியும். அது அவர்களின் உரிமை.. மத்திய அமைச்சர்

 
கிரண் ரிஜிஜூ

தற்போது ஆளும் அரசாங்கத்தை ஒவ்வொரு தனிமனிதனும் கேள்வி கேட்க முடியும். அது அவர்களின் உரிமை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

தலைநகரில் நேற்று நடைபெற்ற டெல்லி பார் அசோசியேஷன் நிகழ்ச்சியில் மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜூ பேசுகையில் கூறியதாவது: நீதிபதிகள் ஆன பிறகு, அவர்கள் தேர்தலையோ, பொதுமக்களின் ஆய்வுகளையோ எதிர்கொள்ள வேண்டியதில்லை. நீதிபதிகள், அவர்களின் தீர்ப்புகள் மற்றும் அவர்கள் நீதி வழங்கும் விதம் மற்றும் அவர்களின் மதிப்பீடுகளை பொதுமக்கள் கவனித்து வருகின்றனர். 

ஊடகம்

தற்போதைய சமூக ஊடகங்களின் காலகட்டத்தில் எதையும்  மறைக்க முடியாது. விவாதம் மற்றும் ஆலோசனைகளுக்கு மிகக் குறைவான வாய்ப்புகள் இருந்ததால், அரசாங்கத்தை கேள்வி கேட்பது அல்லது கருத்துக்களை உருவாக்குவது கடினமாக இருந்தது. ஆனால் சமூக ஊடகங்களின்  காலத்தில் விஷயங்கள் மாறி விட்டன. தற்போது ஆளும் அரசாங்கத்தை ஒவ்வொரு தனிமனிதனும் கேள்வி கேட்க முடியும். அது அவர்களின் உரிமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் அமைப்பு தொடர்பாக மத்திய அரசுக்கும், நீதி துறைக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் மத்திய அரசு பிரதிநிதிகளும், உயர் நீதிமன்ற கொலீஜியத்தில் மாநில அரசு பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால் நீதித் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த சூழ்நிலையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சோதி, உச்ச நீதிமன்றம் நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்வதன் மூலம் அரசியலமைப்பை ஹைஜாக் செய்து விட்டது என்று தெரிவித்து இருந்தார். அவரின் கருத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆதரித்தார்.