ராகுல்காந்தி நிதானமின்றி அவசரமான முடிவுகளை எடுக்கிறார்- குலாம்நபி ஆசாத்

 
gulam nabi

இந்தியாவிற்கு எது சரியானது என்று போராடுவதற்கான திறனை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டதாக கூறி தன்னுடைய அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்  தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ்  குலாம் நபி ஆஷாத் எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், இந்தியாவிற்கு எது சரியானது என போராடுவதற்கான திறனை அகில இந்திய காங்கிரஸ் கட்சி இழந்து விட்டதாகவும் எனவே மிகுந்த மன வேதனையுடன் காங்கிரஸ் கட்சிக்கும் தனக்கும் உண்டான அரை நூற்றாண்டு தொடர்பை முடித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.  மேலும் 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்டதற்கு பிறகு அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு தனிப்பட்ட நலனுக்காக வேலை செய்யக்கூடிய அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு நிலைமை மேலும் மோசமாகி விட்டதாகவும், ராகுல் காந்தி நிதானம் இன்றி அவசரமான முடிவுகளை எடுத்ததாகவும் இதன் காரணமாக கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைத்த மூத்த தலைவர்கள் அவமரியாதை செய்யப்பட்டதாகவும் தன்னுடைய வேதனையை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி இருப்பதாகவும் முக்கிய முடிவுகள் அனைத்தையுமே ராகுல் காந்தி எடுக்கிறார்; இல்லையெனில் ராகுல் காந்தியின் உதவியாளரும் பாதுகாவலரும் முக்கிய முடிவுகளை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் எடுக்க கூடிய முக்கியமான முடிவுகளுக்கு காந்தி குடும்பத்தை சார்ந்து இருக்கக் கூடாது என அதிருப்தி தெரிவித்த 23 தலைவர்களுள் குலாம் நபி ஆஷாத்தும் ஒருவர்! அதேபோல் நிரந்தர தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவை என  வலியுறுத்திய தலைவர்களுள் ஒருவரான குலாம் நபி ஆஷாத் தலைவர் தேர்தல் மேலும் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் என நேற்றைய தினம் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.