பிபிசி ஆவண பட விவகாரம்.. சிலர் பிபிசியை இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு மேலாக கருதுகிறார்கள்... கிரண் ரிஜிஜூ தாக்கு

 
கிரண் ரிஜிஜூ

பிரதமர் மோடியை குற்றம் சாட்டிய பி.பி.சி. ஆவண படத்துக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்களை, சிலர் பிபிசியை இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கு மேலாக கருதுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கினார்.

2002ம் ஆண்டில் குஜராத்தில் இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நடந்த  மோதல் குறித்து, இந்தியா: தி மோடி க்வஷின் என்ற 2 பாகம் கொண்ட ஆவணப் படத்தை பிபிசி உருவாக்கியது. இந்த ஆவணத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. அதில், குஜராத்தில் கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது சர்வதேச அளவில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை தடை செய்யுமாறு யூடியூப் மற்றும் டிவிட்டர் வலைதளத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் ஆவணப்படம் தொடர்பான லிங்குகளை நீக்கின. பிபிசியின் ஆவண படத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

பி.பி.சி., மோடி

ஆவண படத்துக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜூ டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், சிறுபான்மையினர்  அல்லது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகமும் நேர்மறையாக முன்னேறி வருகிறது. இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் தொடங்கப்பட்ட தீங்கிழைக்கும் பிரச்சாரங்களால் இந்தியாவின் இமேஜை இழிவுப்படுத்த முடியாது. பிரதமர் நரேந்திர மோடி ஜியின் குரல் 140 கோடி இந்தியர்களின் குரல்.

உச்ச நீதி மன்றம்

இந்தியாவில் சிலர் இன்னும் காலனித்துவ போதையில் இருந்து விடுபடவில்லை. அவர்கள் பிபிசியை இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு மேலாக கருதுகிறார்கள். அவர்களின் தார்மீக எஜமானர்களை மகிழ்விப்பதற்காக நாட்டின் கண்ணியத்தையும் இமேஜையும் எந்த அளவுக்கும் குறைக்கிறார்கள். எப்படியிருந்தாலும், இநதியாவின் வலிமையை பலவீனப்படுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த நாட்டை துண்டாட நினைக்கும் கும்பல் உறுப்பினர்களிடமிருந்து சிறந்த நம்பிக்கை இல்லை என பதிவு செய்து இருந்தார்