இந்தியாவில் இன்னும் சிலர் காலனித்துவ போதையில் இருந்து மீளவில்லை... பி.பி.சி. ஆவண படத்தை ஆதரிப்பவர்களை சாடிய கிரண்

 
கிரண் ரிஜிஜூ

இந்தியாவில் இன்னும் சிலர் காலனித்துவ போதையில் இருந்து மீளவில்லை என்று பி.பி.சி. ஆவண படத்தை ஆதரிக்கும் எதிர்க்கட்சியினரை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ  தாக்கினார்.

2002ம் ஆண்டில் குஜராத்தில் இந்து-முஸ்லிம் சமூகத்துக்கு இடையே நடந்த  மோதல் குறித்து, இந்தியா: தி மோடி கொஸ்டின் என்ற 2 பாகம் கொண்ட ஆவணப் படத்தை பிபிசி உருவாக்கியது. இந்த ஆவணத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. அதில், குஜராத்தில் கலவரத்தில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இது சர்வதேச அளவில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை தடை செய்யுமாறு யூடியூப் மற்றும் டிவிட்டர் வலைதளத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதனையடுத்து அந்த நிறுவனங்கள் ஆவணப்படம் தொடர்பான லிங்குகளை நீக்கின. 

பிபிசி, மோடி

பிபிசியின் ஆவண படத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை திரையிட பல கல்லூரிகள் முடிவு செய்தன. ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பிபிசி ஆவணப்படத்தை திரையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான  அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) புகார் அளித்துள்ளது. இந்நிலையில், பி.பி.சி. ஆவண படத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடுமையாக சாடினார்.

உச்ச நீதி மன்றம்

மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்தியாவில் இன்னும் சிலர் காலனித்துவ போதையில் இருந்து மீளவில்லை. அப்படிப்பட்டவர்கள் பிபிசியை இந்தியாவின் உச்ச நீதிமன்றத்துக்கு மேலாக கருதுகிறார்கள். தங்கள் தார்மீக எஜமானர்களை மகிழ்விப்பதற்காக நாட்டின் கண்ணியத்தையும் இமேஜையும் எந்த அளவிற்கும் குறைக்கிறார்கள். சிலருக்கு வெள்ளை ஆட்சியாளர்கள் இன்னும் எஜமானர்களாக உள்ளனர், இந்தியா பற்றிய அவர்களின் முடிவே இறுதியானது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முடிவு அல்லது இந்திய மக்களின் விருப்பத்தின் முடிவு அல்ல என பதிவு செய்துள்ளார்.