பட்டினியால் வாடுபவர்கள் மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் பார்க்க வேண்டியதில்லை.. கேரள அமைச்சர் பேச்சால் சர்ச்சை

 
இந்திய, இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன்கள்

பட்டினியால் வாடுபவர்கள் மைதானத்துக்கு சென்று கிரிக்கெட் பார்க்க வேண்டியதில்லை என்று டிக்கெட் கட்டணத்தின் மீதான கேளிக்கை வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி.அப்துரஹிமான் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 15ம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தின் மீது 12 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற போட்டியின் போது டிக்கெட் கட்டணத்தின் மீது 5 சதவீதம் மட்டுமே கேளிக்கை வரியாக விதிக்கப்பட்டது. 

வரி

தற்போது கேளிக்கை வரி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் வி.அப்துரஹிமான் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் மீதான கேளிக்கை வரி தொடர்பாக கேரள அமைச்சர் வி.அப்துரஹிமான் கூறியதாவது: கேரளாவில்  உள்ள அனைவரும் கிரிக்கெட் அதன் முழு உணர்வோடு பார்க்க வேண்டும். உங்களுக்கு இன்னும் பிரச்சினை வரவில்லை. நாம் வரியை குறைத்தாலும், அந்த சலுகைகளை சாமானியர் அனுபவிப்பதில்லை. 

 வி.அப்துரஹிமான்

கடந்த முறை வரி குறைக்கப்பட்டபோதிலும் டிக்கெட் கட்டணம் குறையவில்லை. அமைப்பாளர்கள் (போட்டியை ஏற்பாடு செய்தவர்கள்) அதிக லாபம் ஈட்டக்கூடாது என்பதற்காகவே இம்முறை வரி குறைக்கப்படவில்லை. விலைவாசி உயர்வால் வரியை குறைக்க வேண்டும் என்று பேசுவதை நானும் கேட்டேன். பட்டினியால் வாடுபவர்கள் சென்று விளையாட்டை பார்க்க வேண்டியதில்லை, அவ்வளவுதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.