வன்முறையாக மாறிய பி.எப்.ஐ பந்த் - கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்

 
Kerala HC

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய கேரளா உயர்நீதிமன்றம் அந்த அமைப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய இடங்களில் நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது. தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டி தருவது  தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. 

Kerala

அதன்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. கடையடைப்பு போராட்டத்திற்க முன்பே தடை விதிக்கப்பட்டதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது, அதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. பந்த் போராட்டத்தற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.