முட்டாள்களை பிரபலமாக்க வேண்டாம்... கேரள பெண் அமைச்சரை விமர்சித்த கவர்னர் ஆரிப் முகமது கான்

 
ஆரிப் முகமது கான்

பல்கலைக் கழக வேந்தர் நியமனம் தொடர்பாக கேரள உயர்கல்வி துறை அமைச்சர் பிந்துவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முட்டாள்களை பிரபலமாக்க வேண்டாம் என்று கேரள முதல்வர் ஆரிப் முகமது கான் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் அரசு நடத்தும் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முகமது கானை நீக்குவதற்கான அவசர சட்டத்தை கொண்டு வர முதல்வர் பினராயி விஜயன் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பல்கலைக் கழக வேந்தர் பதவிக்கு கல்வி துறையை சேர்ந்த நிபுணர் ஒருவரை நியமிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.  இதுதவிர, அரசு நடத்தும் ஒன்பது பல்கலைக் கழகங்களுக்கு ஒரு வேந்தரை நியமிக்கும் திட்டம் குறித்து கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்துவும் கருத்து தெரிவித்து இருந்தார்.

ஆர்.பிந்து

இந்நிலையில், அரசு பல்கலைக் கழகங்களுக்கு ஒரு வேந்தரை நியமிக்கும் திட்டம் குறித்த கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்துவின் கருத்தை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கடுமையாக சாடினார். கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அவர் (அமைச்சர் பிந்து) தகுதியானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவள் கருத்துக்கு நான் கருத்து சொல்ல, அவர் தகுதியானவளா? முட்டாள்களை பிரபலமாக்க வேண்டாம்.

பினராயி விஜயன்

அவசர சட்டம் குறித்து நான் பதிலளிக்க விரும்பவில்லை. என்னை அப்டேட் செய்வது முதல்வரின் கடமை. அவர் அதை ஒரு போதும்  செய்யமாட்டார். என் மனதை பயன்படுத்தாமல் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடப் போவதில்லை. பல்கலைக்கழகங்களுக்கு சுயாட்சி என்று ஒன்று உள்ளது. துணைவேந்தர்கள் காரணம் கேட்டதற்கான நோட்டீஸூக்கு பதில் சமர்ப்பித்துள்ளதால் அவர்களுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கேரளாவில் அரசு பல்கலைக்கழங்களின் 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யும்படி கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டார். இது  பினராயி விஜயன் அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானும் இடையே புதிய மோதல் களமாக மாறியுள்ளது.