பகவத் கீதை மத புத்தகம் அல்ல.. எல்லாவற்றிகும் மேலானது.. பைபிள் சர்ச்சைக்கு பதிலளித்த கர்நாடக பா.ஜ..க அமைச்சர்

 
பகவத் கீதை

பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல. அது மத பழக்கங்கள் மற்றும் பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை, அடிப்படையில் இது எல்லாவற்றிற்கும் மேலானது என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளி நிர்வாகம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், தங்கள் குழந்தைகள் (அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள்) பள்ளிக்கு பைபிள் எடுத்து செல்வதை எதிர்க்க மாட்டோம் என்ற உறுதிமொழி படிவத்த்தில் கையயெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டது.  இது  அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

பி.சி.நாகேஷ்

இந்நிலையில் கர்நாடகாவில் நடந்து வரும் பைபிள் சர்ச்சை குறித்தும், பகவத் கீதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கும் மாநில அரசின் முடிவு குறித்தும் கர்நாடக கல்வி துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியதாவது:  பகவத் கீதையையும், பைபிளையும் கலக்காதீர்கள். பகவத் கீதை ஒரு மத புத்தகம் அல்ல. அது மத பழக்கங்களை பற்றி பேசவில்லை. பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அடிப்படையில் இது எல்லாவற்றிற்கும் மேலானது. 

பைபிள்

மாணவர்களின் மன உறுதியை மேம்படுத்தும் எதையும் தார்மீக அறிவியலில் சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடக்க மற்றும் இளைநிலைக் கல்வித் துறை ஏற்கனவே கடந்த 26ம் தேதியன்று பைபிள் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளி நிர்வாகம் நோட்டீசுக்கு பதிலளித்த பிறகு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.