பிரதமர் மோடி கூறியது போல் பொன்னான நாட்கள் நெருங்கி வருகிறது, பெண்கள் இல்லாமல் அது முழுமையடையாது... பசவராஜ் பொம்மை

 
பசவராஜ் பொம்மை

பிரதமர் மோடி கூறியது போல் பொன்னான நாட்கள் நெருங்கி வருகிறது, ஆனால் பெண்கள் இல்லாமல் அது முழுமையடையாது என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் தும்கூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. மகளிர் மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டத்தில் கர்நாடக முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசுகையில் கூறியதாவது: பெண்கள் சிக்கன கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர், அவர்களின் சேமிப்பு குடும்பத்தின் சொத்தாக மாறும். இக்கட்டான நாட்களில் இந்த சேமிப்பு உதவியாக இருக்கும். இதன் காரணமாக ஒரு சில வங்கிகள் திவாலாகின்றன. பொருளாதாரம் சம்பந்தமாக மேற்கத்திய வங்கிகளுக்கும் வீட்டில் சேமிப்பிற்கும் இடையே ஒரு போட்டி உள்ளது. சேமிப்பு என்பது ஒரு பெண்ணின் பலம் மற்றும் பல விஷயங்கள் கலாச்சாரத்திற்கு வெளியே நடைமுறையில் வந்துள்ளன. 

பா.ஜ.க. மகளிர் மோர்ச்சா தேசிய செயற்குழு கூட்டம்

நம் தாய்மார்கள் படிக்காவிட்டாலும் அறிவுப் பொக்கிஷமாக இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி பெண் சிசுக் கொலை குறித்து பேசியது,  பெண் குழந்தைகள்  மீது அவருக்குள்ள அக்கறையை காட்டுகிறது. பெண்கள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வில் முக்கிய பங்காற்ற வேண்டும். பெண்கள் மகிளா மோர்ச்சா தலைவர்களாக மட்டுமின்றி கட்சி தலைவர்களாகவும் உருவாக வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அனைத்து முக்கிய தலைவர்களுடனும் இணைந்து பணியாற்றிய முக்கியமான தலைவர். கர்நாடகாவுடன்  இதயங்களை தொட்டவர். சுஷ்மா ஸ்வராஜ் எந்த பயிற்சியும் இல்லாமல் இதை சாதித்தார். ஆனால் இப்போது பெண்களுக்கு தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் கல்வி மற்றும் பொருளாதார கல்வியும் கிடைக்கிறது. 

மோடி

முறையான கல்வி மற்றும் பொருளாதார கல்வி இரண்டும் முக்கியம். பெண்கள் இதை  சாதித்தால் இதைவிட பெரிய ஆயுதம் எதுவும் இருக்காது. அவர்கள் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள், சமத்துவம் மற்றும் நீதிக்காக அவர்கள் பேச வேண்டும். அதன் மூலம் நாட்டுக்கு விருதுகளை கொண்டு வர வேண்டும். பிரதமர் மோடி கூறியது போல் பொன்னான நாட்கள் நெருங்கி வருகிறது, ஆனால் பெண்கள் இல்லாமல் அது முழுமையடையாது. பெண்கள் வளர்ச்சியின் மையப் புள்ளியாக மாற வேண்டும். அவர்கள் ஏற்கனவே அறிவியல், விண்வெளி, பொறியியல், ஐ.டி/பி.டி. மற்றும் பிற துறைகளில் முத்திரை பதித்துள்ளனர். அவர்கள் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழ அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.