உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் தேவையில்லை என்ற காலம் வரும்... காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் வேதனை

 
கரண் சிங்

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்க எனக்கு அழைக்கப்படவில்லை என்றும், உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் தேவையில்லை என்ற காலம் வரும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கரண் சிங் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான  இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் பங்கேற்க தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரண் சிங் வேதனை தெரிவித்தார்.

நடைபயணத்தின்போது ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரண் சிங் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நான் கட்சியிலிருந்து பிரிந்ததாக உணர்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக நான் கட்சியின் எந்த கமிட்டியிலும் இல்லை அல்லது கட்சி என்னிடம் ஆலோசனை செய்வதில்லை. எனக்கும் கட்சிக்கும் இடையே பிளவு உருவாகியுள்ளது.  இருப்பினும், நான் என் வாழ்நாள் முழுவதும் கட்சியில் இருந்தேன். 

காங்கிரஸ்

ஆனால், இப்போது நான் கட்சிக்கு இனி தேவையில்லை என்று தெரிகிறது. நான் இந்த உலகத்தில் நான் நிறைய பார்த்து விட்டேன். ஆகையால் இது என்னை காயப்படுத்தவில்லை. நான் காங்கிரஸ் வாயிலாக பல விஷயங்களை பெற்றுள்ளேன். ஆனால் உங்களை சுற்றியுள்ள மக்களுக்கு நீங்கள் தேவையில்லை காலம் வரும். கட்சியோடு எந்த தொடர்பும் இல்லை, யாரும் என்னிடம் எதுவும் கேட்பதில்லை. காங்கிரஸிலிருந்து குலாம் நபி ஆசாத் விலகியது கட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் கட்சி பாதிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.